What's new

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • கார்த்திகை நாவல்ஸ் தளத்திற்கு வரவேற்கிறோம்.. இங்கு எழுத விரும்பும் எழுத்தாளர்கள் support@karthigaitamilnovels.com தொடர்பு கொள்ளவும்

3

gavudham

Administrator
Staff member
Joined
Jun 15, 2023
Messages
22
அவர் வீட்டில் இல்லை 3
இன்று நான் பணியில் இணைய வேண்டிய நாள். அதிகாலையில் எழுந்து குளித்து புட்டுத்தோப்பு சிவபெருமானை வணங்கிவிட்டு பேருந்தைப் பிடித்து வளர்நகரில் வந்து இறங்கினேன். கொஞ்சம் தூரம் உள்ளே நடக்க மாநகராட்சி நூலகம் கண்ணுக்கு தென்பட்டது.
இங்கேதான் இன்று முதல் அசிஸ்டன்ட் லைப்ரரியனாகப் பணியாற்றப் போகிறேன்.
உள்ளே நுழைந்தேன். யாரும் இல்லை.
சற்று நேரத்தில் ஒரு பெண் உள்ளே நுழைந்தாள். என்னை கேள்வியாகப் பார்த்தாள்.
"அசிஸ்டன்ட் லைப்ரரியன்"
நான் சொன்னதும் அவள் முகம் மாறியது. புன்னகைத்தவள்
"கௌதம் சார்?"
"ஆமா"
"சார் சொன்னார்"
"சார் எப்ப வருவார்?"
"பத்து மணிக்கு வருவார் " சொன்னவள் என் இருக்கையைக் காட்டினாள்.
"உட்காருங்க சார் "
"ம் உங்க பேர் என்ன?"
"ரேஷ்மி சார். " சொன்னவளைப் பார்த்தேன். வட்ட முகம். கவரும் கண்கள். கூரான நாசி. ஈர்க்கும் இதழ்கள். எலுமிச்சை மஞ்சள் மாலை நேர சூரியனின் ஆரஞ்ச் நிறம் கலந்த கலவையான நிறம். இங்கே இப்படி ஒரு பெண்ணை எதிர்பார்க்கவில்லை நான்.
"சரியான நேரம் வரும்போது உங்களுக்கான பொண்ணு உங்க முன்னாடி வரும் " வாசுதேவ பணிக்கர் சொன்னது நினைவிற்கு வர இவள்தானோ அவள் என்று யோசித்தேன்.
"சார்" ரேஷ்மிதான்.
"ம் சொல்லுங்க"
"என்ன சார் ஒரே யோசனை?"
"உங்களைப் பத்தித்தான் யோசிச்சேன்" சட்டென்று நான் சொல்ல அவள் விழிகளில் மின்னல்.
"என்னைப் பத்தியா? என்ன யோசிச்சீங்க?" அவள் ஆர்வத்தில் ஒரு சிறு குழந்தை தெரிய சிரித்தேன். சொன்னேன்.
"பார்க்கறதுக்கு கேரளாப் பொண்ணு மாதிரி இருக்கீங்க. அவங்கள மாதிரியே தண்ணி ஜடை போட்டா நல்லா இருக்குமேன்னு யோசிச்சேன்." நான் சொல்ல ஒரு நிமிடம் குழம்பிய ரேஷ்மி சிரித்தாள்.
"லூஸ் ஹேரா ?"
"ஆமாங்க"
"ம் ஆனா எனக்கு இந்த மாதிரி பின்றதுதான் பிடிக்கும்"
"பின்றீங்க ரேஷ்மி"
"போங்க சார்"
"இன்னைக்குத்தான் ஜாயின் பண்ண வந்திருக்கேன். எங்க போகச் சொல்றீங்க?" நான் குறும்பாய் கேட்க அவள் மீண்டும் சிரித்தாள்.
"ரேஷ்மி ஒண்ணு சொல்லவா?"
"சொல்லுங்க சார்"
"நீங்க லூஸ் ஹேர்ல இல்லாம இருக்கிறதிலயும் நன்மை இருக்குங்க "
"நன்மையா?"
"ம்"
"என்ன அது?"
"நிறைய பேரை லூஸா சுத்த விடல நீங்க"
"போங்க சார்" அவளின் சற்றே சிணுங்கலான போங்க சாரை நான் மிகவும் ரசித்தேன்.
கொஞ்ச நேரத்தில் பரந்தாமன் உள்ளே வந்தார். இந்த நூலகத்தின் லைப்ரரியன். என்னை கேள்வியாகப் பார்த்தவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டேன்.
"கெளதம். டூட்டியில ஜாயின் பண்ண வந்திருக்கேன் "
அவர் புன்னகைத்தார்.
"வாங்க"
அவர் தன் இருக்கையில் அமர நான் எதிரில் அமர்ந்தேன்.
"அப்பாயின்மென்ட் ஆர்டர் கொடுங்க " கேட்டார். கொடுத்தேன். வாங்கிப் பார்த்தார்.
"ஜாயினிங் ரிப்போர்ட் எழுதிட்டிங்களா?"
"யெஸ் சார்" எடுத்துக் கொடுத்தேன். அதை வாங்கி வைத்துக் கொண்டவர் தன் முன் இருந்த வருகைப் பதிவேட்டை எடுத்து என்னிடம் கொடுத்தார்.
"சைன் பண்ணிடுங்க. மார்னிங் ஈவினிங் ரெண்டு நேரமும் சைன் பண்ணனும் "
"யெஸ் சார்"
"எங்க ஸ்டே பண்றீங்க?"
"அரசரடில இருக்கேன் சார்"
"ஃபேமிலி?"
"இல்ல சார். எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல"
"ஓகே. சீக்கிரம் நடக்கட்டும்"
"தேங்க்ஸ் சார்"
என் இருக்கையில் வந்து அமர்ந்தேன். பரந்தாமன் சார் மிகவும் நல்ல மாதிரியாக இருக்கிறார். நல்ல தாய் தந்தை நல்ல நட்பு நல்ல காதலி நல்ல குழந்தை நல்ல வீடு இவை மட்டுமல்ல நம் விதி நன்றாக இருந்தால்தான் அல்ல மேலதிகாரியும் கிடைப்பார். எத்தனையோ பேரை நான் பார்த்திருக்கிறேன். தன் கீழ் பணியாற்றுபவர்களை வைத்து வேலை வாங்கி அதன் பயனை அவர்களுக்கு சற்றும் தராமல் தான் மட்டுமே அனுபவிக்கும் எத்தனையோ மேலதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
எனக்கு இந்த வேலை பிடித்திருக்கிறது. இந்த சூழ்நிலையும் நன்றாக இருக்கிறது. பரந்தாமன் சார் தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருக்கிறார். எதிலும் தேவையில்லாமல் தலையிடுவதில்லை. ரேஷ்மி விழிகளுக்கு மட்டுமல்ல. மனதிற்கும் குளிர்ச்சியாக இருக்கிறாள். ஆனால் சில நேரங்களில் தன் மொபைலில் அவள் பேசும்பொழுது உள்ளே பகீர் என்கிறது. சாதாரண பெண்களையே விட்டு வைக்காத சமூகம் இவ்வளவு அழகாய் ஒரு பெண் இருக்கும் பொழுது காதலிக்காமல் விட்டு விடுமா என்ன? எவனாவது ஒருவன் நிச்சயம் இருப்பான் என்று என் உள்ளம் சொல்லியது. அதே நேரத்தில் அந்த முகம் தெரியாதவன் மீது கோபமாகவும் வந்தது.
எனக்குள் ஓடிய எண்ணங்கள் எனக்கு சிரிப்பைத்தான் தந்தன. அவளுக்கு ஒரு காதலன் இருந்தால் இருந்துவிட்டு போகட்டுமே?
எனக்கு ஏன் கோபம் வர வேண்டும்? இல்லை கோபம் இல்லை.
ம்.
ஆனால் நான் பாவம் தானே?
நேரம் வரும்போது உனக்கான பெண் உன் முன்னே வந்து நிற்பாள்.
அந்த நேரம்தான் என் வாழ்க்கையில் இன்னும் வர மாட்டேங்கிறதே?
வரும்.
எப்பொழுது ?
எப்போதாவது,
ஒருவேளை வரவில்லை என்றால்..
நம்பிக்கை. அதானே வாழ்க்கை?
ம்
உணவு இடைவேளையில் வெளியே வந்தேன் சற்று தூரம் நடந்தேன். ஒரு சிறிய மெஸ் இருந்தது.
உள்ளே எட்டிப் பார்த்தேன்.
"என்னண்ணே?"
"சாப்பாடு இருக்கா?"
"இருக்குண்ணே வாங்க"
உள்ளே சென்று அமர்ந்தேன். ஒருவர் வந்தார்.வாழையிலை வைத்து நீர் தெளித்து சுடுசோறு போட்டார்.
"மீன் குழம்பு போடவாண்ணே?"
"ம்"
மத்தி மீன் குழம்பு. சோற்றை குழம்புடன் பிசைந்து ஒரு வாய் வைத்தேன். சுவை கண்களை மூடி ரசிக்க வைத்தது. என்னதான் பெரிய ஹோட்டல்களில் சாப்பிட்டாலும் ஒரு சிறிய மெஸ்ஸில் கிடைக்கும் சோறு மீன் குழம்பு கொடுக்கும் சுவைக்கு எதுவும் ஈடாவதில்லை.
சாப்பிட்டு முடித்தேன் வயிறு மட்டும் அல்ல மனமும் நிறைந்தது.
"நான் இங்க டெய்லி மதியம் சாப்பிட வருவேன் " சொன்னேன்.
"வாங்கண்ணே"
மீண்டும் என் இருக்கையில் சென்று அமர சற்று அசதியாக உணர்ந்தேன். ஏதாவது படிக்கலாமா என்று தோன்றியது. இந்த வேலை நான் விருப்பப்பட்டு ஏற்றெடுத்த வேலை. சிறுவயதிலிருந்தே எனக்கு படிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். படிப்பது என்றால் பள்ளி புத்தகங்களை அல்ல. கதைகள் கவிதைகள் கட்டுரைகள் வாழ்க்கை தத்துவங்கள் என்று பல் சுவைகளில் படித்தே வளர்ந்தேன் நான். இந்த நூலகத்தில் என் அனைத்து ரசனைகளுக்கும் தீனி கிடைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
எழுந்து சென்று பார்த்தேன். ஒரு புத்தகம் என் கவனத்தைக் கவர்ந்தது.
அண்ணா. ஒரு சாதாரண மனிதரின் அசாதாரண வாழ்க்கை.
எழுதியவர் இரா. கண்ணன் தமிழில் சாருகேசி என்றிருந்தது. விகடன் பிரசுரம்.
பேரறிஞர் அண்ணாவின் வாழ்வில் நடந்த பல சம்பவங்கள் சுவையாய் தொகுக்கப்பட்டிருந்தன. தற்போதைய மாணவர்கள் இளைஞர்கள் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டிய தெரிந்து கொள்ள வேண்டிய பல அரிய தகவல்கள் இடம் பெற்றிருந்ததை என்னால் உணர முடிந்தது. இத்தகைய நல்ல தலைவரைப் பற்றி இப்போதுள்ள இளம் தலைமுறைக்கு புரிய வைப்பதற்கு எவரேனும் முயற்சி எடுக்கிறார்களா என்று எனக்குள் யோசனை வந்தது. அவர் பெயரை சொல்லி பிழைப்பு நடத்துபவர்கள் கூட அதில் போதிய அக்கறை காட்டவில்லை என்ற வருத்தம் மேலோங்கியது. ஒன்று மட்டும் நிச்சயம். நமக்கு ஏதாவது தெரிய வேண்டுமென்றால் நாம் தான் அதைத் தெரிந்து கொள்ள வேண்டும். தேடி கற்க வேண்டும் எவரும் நமக்கு செய்வார் என்று எதிர்பார்த்தல் ஆகாது.
எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை. புத்தகத்தில் மூழ்கியிருந்த என் முன் நிழலாட நிமிர்ந்து பார்த்தேன்.
ரேஷ்மி.
"சார் இங்கேயே தூங்கிடாதீங்க வீட்டுக்கு போய் தூங்குங்க" சிரித்தபடி சொல்ல மணி பார்த்தேன்.
மாலை ஆறு மணி.
"வர்றேன் சார்" என்றவள் பின் என் விழிகளும் சென்று மீண்டும் ஒரு பெருமூச்சை விடச் செய்தது.
முதல் நாள் வேலை முடித்து என் அறைக்கு வந்தேன். அப்போதுதான் தோன்றியது. இன்று முழுவதும் சத்யாவைப் பற்றி நினைக்கவில்லை நான். அப்படி என்றால் செய்வதற்கு ஒரு வேலை இருந்தால் அந்த வேலையை நாம் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் நம்மை பாதிக்கும் நினைவுகள் நம்மை பாதிக்காமலும் போகும்.
பாவம் சத்யா. கடைசியாக என்ன சொல்லிச்சென்றாள்? அழ வேண்டும் போல் இருக்கிறது. ஆனால் சந்தோசமாக இருக்கிறேன்.
மகிழ்வாய் இருக்கும் பொழுது எவருக்காவது அழத் தோன்றுமா என்ன? தெரியவில்லை. அவள் என்ன சொல்ல வந்தாள் என்று யோசித்துப் பார்த்தேன். ஏதோ புரிந்த மாதிரி இருந்தது புரியாத மாதிரியும் இருந்தது. வரும்போது பக்கத்து மெஸ்ஸில் இருந்து இட்லி வாங்கி வந்திருந்தேன். சாப்பிட்டுவிட்டு மொட்டை மாடியில் சற்று நேரம் உலாத்தினேன். இரவு நேரத்தில் வானத்தில் நட்சத்திரங்களை பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். இரவுப் பொழுதின் அமைதியில் ஒருவித மர்மம் கலந்திருக்கும். எப்பொழுது வந்து படுத்தேன் என்று தெரியவில்லை.
***
"நிஜமா என்னைப் பிடிக்குமா?" சத்யா என்னிடம் கேட்டபோது வானத்தில் மிதந்த நிலாவைப் பார்த்த நான் அவளிடம் திரும்பினேன்.
அவள் முகம் மொட்டை மாடியின் நிலவொளியில் பிரகாசித்தது. ரசித்தேன்.
"கௌதம்"
"ம்"
"பதில் சொல்லலையே?"
"என்ன கேட்டீங்க?"
"நிஜமா என்னைப் பிடிக்குமான்னு…" அவள் சொல்லி முடித்திருக்கவில்லை. அவளை என்னை நோக்கி இழுத்தேன். அதை எதிர்பாராதவள் விலக முற்பட நான் விடவில்லை. என்னோடு இழுத்து அணைத்தேன்.
"ப்ளீஸ் விடுங்க" சொன்னவள் திமிற நான் கண்டுகொள்ளவில்லை.
அவள் முகத்தை நிமிர்த்தினேன். அவள் இதழ்கள் என்னை ஈர்க்க என் உதட்டை ஈரப்படுத்திக்கொண்டு சட்டென்று கவ்வினேன்.
"ம்ம்ம்" ஏதோ சொல்ல முயன்றாள் முடியவில்லை. என் முத்தம் நீண்ட நேரம் தொடர்ந்தது.
சற்று நேரம் கழித்து அவளை விடுவிக்க மூச்சு வாங்கினாள்.
"ஏன் இப்படி?" சத்யா கேட்க சிரித்தேன்.
"நீங்கதானே கேட்டீங்க? என்னை பிடிக்குமான்னு. அதான் உங்களை ரொம்பப் பிடிக்கும்னு காட்டினேன் "
"அதுக்காக இப்படியா?"
"அது என்னமோ தெரியல. உங்களைப் பார்த்தாலே உள்ளுக்குள்ள ஏதேதோ ஆயிடுது சத்யா"
"ஆகும் ஆகும்" அவள் சொல்ல நான் சிரித்தேன். சத்யா மாடிப்படியில் கீழே இறங்க கேட்டேன்.
"என்ன அவசரம் இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போலாமே?"
"இல்லப்பா அவர் வர்ற நேரமாச்சு"
சொல்லிவிட்டு இறங்க முற்பட்டவள் திக்கென்று அதிர்ந்தாள். அவள் கணவன் நின்றிருந்தான். கோணலாய் புன்னகைத்தான்.
"தெரியும்டி எனக்கு தெரியும். எப்ப இவன் என்னோட வீட்டுக்கே வந்து என்னை உதைச்சானோ அப்பவே உனக்கும் இவனுக்கும் தொடர்பு இருக்குன்னு எனக்குத் தெரியும் " சொன்னபடி சத்யாவை எட்டி உதைக்க நான் தடுக்க முயன்றும் முடியாமல் சத்யா மாடியிலிருந்து கீழே…
***
நான் எழுந்து கொண்டேன். இது கனவு என்று உணரவே எனக்கு ஒரு நிமிடம் பிடித்தது. என் முகம் முழுவதும் வியர்த்திருக்க மனதிற்குள் இனம் புரியாத பதட்டம் ஓடியது. மாடிக்கு ஓடினேன். என் விழிகள் அவள் வீட்டின் மேல்…
தொடரும்
 
Top